குற்றவாளி ஜெயலலிதா படத்தை திறந்தது ஏன்?

சென்னை, பிப்.13- குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோர் ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு வர மறுத்த பிறகும் சட்டப்பேரவையில் அவசர அவசரமாக குற்றவாளி ஜெயலலிதா படத்தை திறந்தது ஏன்? என்று கழக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.2.2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :- செய்தியாளர்: குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து இருக்கிறார்களே? தளபதி மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன் றத்தினால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டு, 4 ஆண்டுகால சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட முதல் குற்றவாளி ஜெயலலிதா அவர்கள் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு பெங்களூர் சிறையில் இருந்திருப்பார். ஏற்கனவே, அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு விழாக்களில் அவரது புகைப்படங்களை வைக்கக் கூடாது என்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந் துள்ள வழக்கின் விசாரணை இன்று நடைபெறவிருக்கின்ற நிலையில், தங்களு டைய நோக்கத்துக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்திருக்கின்றனர். அவை மரபை மீறிய பேரவைத் தலைவர்! இதுகுறித்து, ஏற்கனவே நான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளேன். சபாநாயகர் என்பவர் சட்டமன்றத்தின் அவையின் மரபை பாதுகாக்க வேண்டிய வர். தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளின் ஒத்துழைப்போடு, மாமூல் வாங்கிக் கொண்டு, அரசின் ஒத்துழைப்போடு விற்கப்படுகிறது என்ற செய்தியை சட்டமன்றத்தில் நாங்கள் எடுத்துச் சொன்னபோது, ஆதாரமாக குட்காவை சட்டமன்றத்தில் எடுத்துக் காட்டியபோது, அதில் எந்த தவறும் இல்லாதபோதும், எங்களை அவையில் இருந்து வெளியேற்றினார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்போது நாங் கள் அவையை மீறியதாக சொல்லும் அவர், இன்றைக்கு அவை மரபை மீறியுள்ளார் என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. இன்று எங்களுடைய மூத்த வழக்கறி ஞர் வில்சன் அவர்கள் படத்திறப்பு விழா தொடர்பாக நீதிமன்றத்தில் அளித்துள்ள மனு நாளை நீதிமன்ற விசாரணைக்கு வரவிருக்கிறது. ஜெயக்குமாரின் பதில் என்ன? செய்தியாளர்: படத்திறப்பு குறித்து தி.மு.க. இதை அரசியலாக்குவதாக பொன். ராதா கிருஷ்ணன் கூறியுள் ளாரே? மு.க.ஸ்டாலின் : தி.மு.க. மட்டுமல்ல, காங்கிரஸ், சி.பி.எம்., தே.மு.தி.க. உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்து இருக் கிறார்கள். அதுமட்டுமல்ல, படத்தை திறந்து வைக்க வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்கள், மேதகு ஜனாதிபதி அவர் கள் மற்றும் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் ஆகியோரை அணுகியும், குற்ற வாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் படம் திறப்பது தவறு, எனவே வரமாட்டோம் என்று அத்துணை பேருமே சொன்ன பிறகுதான் அவசர அவசரமாக சபாநாயகர் மூலம் திறந்து இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில், மீன் வளத்துறை அமைச்சராக உள்ள ஜெய குமார், சட்டமன்றத்தில் மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் படத்தை திறப்போம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி யெனில், இன்று பிரதமரும், ஜனாதிபதியும் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும். செய்தியாளர்: பேருந்துக் கட் டண உயர்வு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மு.க.ஸ்டாலின்: தி.மு.க. சார்பில் இதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை சமர்ப்பித்து இருக் கிறது. நேற்று இரவு தொடங்கி இந்த நிமிடம் வரையிலும் இதுகுறித்து முதல் அமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டு வருகிறோம். ஆனால், பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில்கூட எனக்கு இது வரை அனுமதி வழங்கவில்லை. செய்தியாளர்: பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறதே? மு.க.ஸ்டாலின் : 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியுமா, முடியாதா என்பது தெரியவரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்தார்.