லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தி.மு.க. மனு!

சென்னை, மார்ச் 14- பதவியைப் பயன்படுத்தி முறைகேடாக வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித் துள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகத்திற்கு கழக அமைப்புச் செயலாளரும், மாநிலங்கள வைக் கழக உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி எம்.பி. தி.மு.கழகத்தின் சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளார். இதுகுறித்து தி.மு.கழகம் வெளியிட் டுள்ள பத்திரிகைக் குறிப்பில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது :- தி.மு.கழகத்தின் சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தமிழ்நாடு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் சகாக்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்தக் கோரி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :- தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் நிதி, திட்டம், சட்டப்பேரவை, தேர்தல்கள் மற்றும் பாஸ் போர்ட்டுகள், வீட்டு வசதி, கிராமப்புற வீட்டு வசதி, வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம், குடியிருப்பு வசதி கட்டுப்பாடு, நகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற மேம்பாடு, சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சித் தலைவராக 1996 முதல் 2001 வரை இருந்தார். 2001 சட்டப் பேரவைத் தேர்தலில், பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வருவாய்த் துறை அமைச்சரானார். அவருடைய தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா பதவி விலகிய போதும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட போதும் இடைக்கால முதலமைச்சராக இருந்தார். அதன்படி முதல் முறை 29.9.2001 முதல் 1.3.2002 வரை இடைக்கால முதலமைச்சராக இருந்தார். ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண் டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பி.ஆர். கபூர் தொடர்ந்த வழக்கில் அவர் முதலமைச் சரானது செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் ஜெயலலிதா பதவி விலகிய போது அவர் இடைக் கால முதல மைச்சரானார். அதன் பிறகு 2.3.2002 முதல் 3.6.2003 வரை பொதுப் பணித் துறை அமைச் சராகவும், அதன் பிறகு கூடுதலாக நிதித் துறை அமைச்சராக வும் இருந்தார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப் பினரானார். சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்! மீண்டும் 2011 தேர்தலில் அவர் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடியும் மற் றொரு ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட போது 28.9.2014 முதல் 22.5.2015 வரை இடைக்கால முதலமைச் சராக இருந்தார். அப்போது அவர் நிதி மற்றும் பொதுப் பணித் துறைகளை நிர்வகித்து வந்தார். மீண்டும் 2016ல் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி அமைச்சரானார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து 6.12.2016 முதல் 5.2.2017ல் பதவி விலகும் வரை மீண்டும் இடைக்கால முதலமைச்சராக இருந்தார். 21.8.2017 அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையி லான அரசின் துணை முதல மைச்சராக நிய மிக்கப்பட்டு மேலே குறிப் பிட்ட பொறுப் புகளை வகித்து வருகிறார். பொது ஊழியரான ஓ.பன்னீர்செல் வம், திருமதி. பி.விஜயலட் சுமியை மணந் துள்ளார். அவர்களுக்கு பி.ரவீந்திரநாத் குமார், வி.ஜெயபிரதீப் மற்றும் கவிதா பானு ஆகிய மூன்று குழந் தைகள் உள்ளனர். வருமான வரித்துறை முன் பொய்யான தகவல்! ஓ.பன்னீர்செல்வம் தனது பத வியை துஷ்பிரயோகம் செய்து சட்ட விரோதமாக, தனது வருவாய்க்கு அதிகமாக ஏராள மான சொத்துக்களை வாங்கிக் குவித் துள்ளார். அவற்றை பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். தனது பெயரிலும் மற்றவர்கள் பெயர்களிலும் அவற்றை வாங்கிக் குவித்துள்ளார். இதற்காக அவர் வருமான வரித் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன் பொய்யான அறிவிப்பு களை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் அவர் மீது, வருமான வரித் துறைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், பினாமி வர்த்தகத் தடைச் சட்டம், பண முறைகேடுச் சட்டம் மற் றும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக் குகள் தொடர வாய்ப்புகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் பல நிறுவனங் களில் பணம் முதலீடு செய்துள்ளார். தனது மனைவி, குழந்தைகள், சகோத ரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண் முகசுந்தரம், அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் அவருடைய வர்த்தக சகா ஆர்.சுப்புராஜ் மற்றும் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர்கள் பெயர் களிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையப் பிரமாணப் பத்திரங்களில் பொய்யான தகவல்! தேர்தல் ஆணையம் முன் அளித்த பிரமாணப் பத்திரங்களில் உண்மைகளை மறைத்து பொய்யான தகவல்களை அளித் துள்ளார். அவற்றில் அவர் கீழ்க்கண்ட வாறு சிலவற்றை கூறியுள்ளார். (அ) 2016ல் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் 2014-15ல் தனது வருவாய் ரூ.5,80,875 என்று கூறியுள்ளார். அதே காலக் கட்டத்தில் அவர் டயோட்டா இன்னாவா கார் ஒன்றை 17,85,655க்கு வாங்கியதாகவும் கூறியுள்ளார். இது முரண்பாடாக உள்ளது. (ஆ) ஓ.பன்னீர்செல்வம் 40 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை பாகப் பிரிவினை மூலம் பெற்றார். அதில் 3 ஏக்கர் 60 சென்ட்டை அவர் விற்றுள்ளார். ஆனால் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இந்தச் சொத்து பற்றி அவர் குறிப்பிடவில்லை. இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். (இ) தனது மனைவி விஜயலட்சுமியின் சொத்து பற்றி ஓ.பன்னீர்செல்வம் தகவல் அளித்தபடி, அவர் ரூ.2,71,225 மதிப்புள்ள வீட்டை 2.11.1998ல் அவர் கொண்டு வந்ததாகவும், 2011ல் அதன் மதிப்பு ரூ.10 லட் சம் என்றும், அதில் ரூ.5 லட்சம் செல வில் மேம்பாட்டுப் பணிகள் செய்துள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார். 2016ல் அதே வீட்டின் மதிப்பு ரூ.20,00,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பு உயர்வு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மனைவியின் வருமானம் கடுமையாக உயர்வு! 2011 தேர்தலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மனை விக்கு ஜார்ஜ் டவுன், சிட்டி யூனியன் வங்கியில் ரூ.2,81,314 கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையில் அவர் ரூ.9,00,000 கடன் பெற்றுள்ளார். இதே போன்று பிரமாணப் பத்திரத்தில் 2005 மற்றும் 2006ல் தனது மனைவியின் வருவாய் ரூ.36,251/- என்று குறிப்பிட் டுள்ளார். ஆனால் வருமான வரித் துறைப் பதிவேடுகளில் ரூ.20,400 என்று குறிப் பிடப்பட்டுள்ளது. 2016ல் சொத்துக்களின் மதிப்பு ரூ.78,00,000 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. குடும்பத் தலைவியான வேறு வருவாய் இல்லாத விஜயலட்சுமியின் வருவாய் இவ்வளவு கடுமையாக உயர்ந்துள்ளது. (ஈ) 2016ல் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 2011ல் குபேந்திரனிடமிருந்து வாங்கியச் சொத்தின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை. லஞ்சப் பணத்தில் உருவான நிறுவனங்கள்! மேலும் கீழ்க்கண்ட சொத்துக்களை ஓ.பன்னீர்செல்வமும் மற்றவர்களும் வைத் துள்ளனர். (அ) போஜராஜன் மில்ஸ், தேனி மாவட்டம் (140 கோடிக்கு மேல் மதிப்புள்ள) 99 ஏக்கர் நிலம் அரசால் 99 ஆண்டு களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்தக் குத்தகை 2011-12ல் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தால் மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.(ஆ) ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் உள்ள 150 ஏக்கர் மாந்தோப்பு பினாமிகள் பெயரால் ஓ.பன்னீர்செல்வத் தின் வசம் உள்ளது. (இ) தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து தனது பினாமிகள் மூலம் ஏலக்காய் சந்தையை பன்னீர்செல்வம் தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ளார். அவருடைய மகன்கள் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அந்த முதலீடுகளுக்கான அடிப்படை ஆதாரம் விளக்கப்படாமலே உள்ளது. அது விசாரிக்கப்பட வேண்டும். (அ) ஓ.பன்னீர்செல்வத்தின் குழந் தைகள் பி.ரவீந்திரநாத்குமார், விஜய பிரதீப், திருமதி கவிதா பானு ஆகியோர் பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர் களாக உள்ளனர். அவர்கள் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, துருக்கி, இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகளிலும் முதலீடு செய் துள்ளனர். (ஆ) பன்னீர்செல்வத்தின் மகன் பி.விஜயபிரதீப் 25வயது ஆவதற்கு முன்பே 3 நிறுவனங்களின் இயக்குநராகி உள்ளார். வில்லோனெட்எக்ஸிப் (பி) லிட், விஜய காந்த் டெவலப்பர்ஸ் (பி) லிட், வாணி பேப்ரிக்ஸ் (பி) லிட் ஆகியவை அந்த நிறுவனங்களாகும். அவருடைய நிதி ஆதாரம் விசாரணைக்குரியது. (இ) வாணி பேப்ரிக்ஸ் தனது இயக் குநர்கள் பி.ரவீந்திரநாத்குமார், விஜய பிரதீப் ஆகியோருக்கு மற்ற இயக்குநர் களைவிட 3 மடங்காக ரூ.9 லட்சம் சம்பளம் அளித்துள்ளது. உண்மையில் அவர்கள் அதன் நிர்வாக இயக்குநரை விட அதிக சம்பளம் அளிக்கப்பட் டுள்ளனர். இவற்றின் மூலம் இவை ஓ.பன்னீர்செல்வத்தால் லஞ்சப் பணத் தின் மூலம் உருவாக்கப்பட்ட நிறு வனங்கள் என்பது உறுதியாகிறது. ரவீந்திரநாத்குமார், விஜயபிரதீப் ஆகியோர் ரூ.67,26,883 மதிப்புள்ள ஏராளமான ஏக்கர் நிலங்களை வாங்கி யுள்ளனர். அவை அவர்கள் பெயரிலும் ஜெயம் விஜயம் எண்டர்பிரைசஸ் பெயரிலும் வாங்கப்பட்டுள்ளன. இவை குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான நிதி ஆதாரங்கள் காட்டப் படவில்லை. அண்ணா சாலை ராஹேஜா டவர்ஸ் கட்டிடத்தில் எக்ஸலைட் மிஷன் லைன் பிரைவேட் லிட் என்ற பெயரில் 3 அறைகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் ரிமார்ட் இண்டர் நேஷனல் (பி) லிட், பெரிகான் ஐ.டி.எடு (பி) லிட் நிறுவனங்கள் பெயர்களிலும் சொத்துக்கள் வாங்கப் பட்டுள்ளன. இதன் இயக்குநர்கள் வேறாக இருந்தாலும் அவர்கள் வேறு தொழில் களில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆவர். இவற் றிலும் மற்றும் பாப்பா பில்டர்ஸ் (பி) லிட் போன்ற நிறுவனங்களிலும் ஓ.பன்னீர் செல்வத்தின் சகாக்கள் இயக்குநர்களா கவும், பங்குதாரர்களாகவும் உள்ளனர். இதில் இயக்குநராகவும், பங்கு தாரராகவும் இருப்பவர்கள் (அ) சட்டப்பூர்வமாக எந்தத் தொழிலும் செய்யாதவர்கள் (ஆ) தங்கள் உண்மையான நிதி நிலையைக் காட்டாதவர்கள் (இ) நிறுவனங்கள் சட்டம் உள்பட அனைத்து சட்டங்கள் படியும் செயல் படாதவர்கள் (ஈ) பணத்தை மறைப்பதற்காக பன்னீர்செல்வத்தின் சகாக்களாக செயல் படுபவர்கள் அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியைப் பயன்படுத்தி நிதிச் சலுகை களை தனது குடும்பத்தினருக்கு பெற்று வருகிறார். (அ) வாணி பேப்பரிக்ஸில் இயக்கு நர்களாகவும், பங்குதாரர்களாகவும் இருக்கும் பி.ரவீந்திரநாத்குமாரும், ஜெயப் பிரதீப்பும் வீணாபேப்ரிக்ஸ் நிறுவனத் திலும் பங்குதாரர்களாக உள்ளனர். (ஆ) பன்னீர்செல்வம் 28.9.2014 முதல் 22.5.2015 வரை இடைக்கால முதலமைச் சராக இருந்த போது பிறப்பித்த அரசாணை மூலம் மதிப்புக் கூட்டு வரியிலிருந்து ஏலக்காய்க்கு விலக்கு அளிக்கப்பட்டது. நூல் விற்பனைக்கான வரியும் 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவி கிதமாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டது. (இ) பெரியகுளத்தில் ஜூலை 12,2017ல் வரட்டாறு ஆற்றின் அருகே 40 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்தார். அங்கு 4 ஆழ்துளைக் கிணறுகளை சட்டத்தை மீறி அமைத்தார். அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ரூ.23,66,290 மதிப்புள்ள அந்த நிலம் ரூ.20,10,000க்கு சுப்புராஜூக்கு மாற்றப்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட விரோதத் தொடர்புகள் ஜே.சேகர் ரெட்டியால் நடத்தப்பட்ட பால் பண்ணை மூலம் மேற் கொள்ளப்பட்டது. அவர் எஸ்.ஆர்.எஸ். சுரங்க நிறுவனத்திலும், பங்குதாரராக இருந்தார். அந்த நிறுவனத்திலிருந்து பன்னீர் செல்வமும் அவருடைய சகாக் களும் 6 மாதங்களுக்குள் (2016 ஜூன் - நவம்பர்) ரூ.4 கோடி பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் குறித்து சி.பி.ஐ.யும் வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த ஊழல்களின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்காளர் களுக்கு துரோகம் இழைத்துள்ளார். மேலே குறிப்பிட்டவை மூலம் ஓ.பன் னீர்செல்வம் தனது பெயரிலும் தனது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரிலும் பெருமளவிலான சொத் துக்கள் வாங்கிக் குவித்துள்ளார். அவருடைய செயல்கள் அதிகார துஷ்பிரயோகம் ஆகும். எனவே, வரு வாய்க்கு அதிகமாக அவர் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே தாங்கள் இந்தக் குற்றச் சாட்டுகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.